Saturday, August 16, 2014

தண்ணீர் இணைப்பு பெற முடியாமல் தவிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் இல்லாததால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலத்தில் ஆசிரியர், மாணவர்கள் உள்ளனர்.


இப்பள்ளியில் கீழத்தூவல், மேலத்தூவல், சாம்பக்குளம் உடைகுளம், மகிண்டி, சூரங்குளம், பொசுக்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபின், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் உள்ளது.

மூன்று மாடி கட்டட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், புது வகுப்பறையை திறப்பதில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமசாமி கூறுகையில், "பள்ளி சுற்றுச்சுவர் அருகே காவிரி குடிநீர் குழாய் உள்ளது. பள்ளிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த அதிகாரிகளிடத்தில் முறையிட்டுள்ளோம். அதிகாரிகள், "பள்ளிக்கு குடிநீர் வழங்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை" என மறுக்கின்றனர்.

சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், புது வகுப்பறை கட்டடத்தை பயன்படுத்த முடியவில்லை" என்றார். குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியம் கூறுகையில், "பள்ளிக்கு குடிநீர் வசதி கேட்டு முறையீடு செய்தனர். ஆனால் மாவட்ட அதிகாரிகள் உத்தரவு வழங்கினால்தான், குடிநீர் இணைப்பு வழங்க முடியும்" என்றார். முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயகண்ணு கூறுகையில், "அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குடிநீர் வசதி ஏற்படுத்தவும், கட்டடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments: