Monday, May 25, 2015

தமிழக முதல்வராக, நேற்று முன்தினம் பதவியேற்ற ஜெயலலிதா, நேற்று கோட்டைக்கு வந்து பொறுப்பேற்ற முதல் நாளில், ஐந்து புதிய திட்டங்களை அறிவித்தார்.








தமிழகம் முழுவதும், 201 'அம்மா' உணவகங்களையும், குறைந்த விலை பருப்பு விற்பனையையும் துவக்கி வைத்தார்.

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததால், முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, மேல்முறையீட்டு வழக்கில், ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், நேற்று முன்தினம் நடந்த பிரம்மாண்ட விழாவில், தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், நேற்று மதியம், 3:00 மணிக்கு தலைமைச்
செயலகம் வந்த ஜெயலலிதா, தன் அறைக்கு சென்று, முதல்வருக்கான பொறுப்புகளை ஏற்று, அலுவல்களை துவக்கினார். முதற்கட்டமாக, ஐந்து புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் வரிசையாக கையெழுத்திட்டு, அவை செயல்பாட்டிற்கு வர அனுமதி வழங்கினார்.

ஜெ., கையெழுத்திட்ட, ஐந்து திட்டங்கள் வருமாறு:
*நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சாலை மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டம்
*தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம்
*பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை - எளிய குடும்பங்களுக்கான வீட்டு வசதி திட்டம்
*1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்
*மகளிரை குடும்ப தலைவராக கொண்ட, நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்பு திட்டம்

ஐந்து திட்டங்களை அறிவித்த பின், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் சென்னையில், 45, 'அம்மா' உணவகங்களையும், மற்ற மாவட்டங்களில், 156 உணவகங்கள் என, மொத்தம், 201 'அம்மா' உணவகங்களையும், அவர் துவக்கி வைத்தார். அத்துடன், வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையாக, அரை கிலோ துவரம் பருப்பு - 53.50 ரூபாய்க்கும்; அரை கிலோ உளுந்தம் பருப்பு 'ஏ' ரகம் - 56 ரூபாய்க்கும்; 'பி' ரகம் - 49.50 ரூபாய்க்கும் விற்கும் புதிய விற்பனை திட்டத்தையும் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின், மாலை, 3:55க்கு, கோட்டையில் இருந்து தன் போயஸ் தோட்டம் இல்லத்திற்கு சென்றார். நேற்று, வீட்டிலிருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சாலையின் கட்சித் தொண்டர்கள் கூடி நின்று, உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்று பணிகளை துவக்கியதை தொடர்ந்து, தன்னுடன் பதவியேற்ற, 28 அமைச்சர்களையும் பொறுப்பேற்று கொள்ளும்படி உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்ற அமைச்சர்கள் அனைவரும், தங்கள் அறைகளுக்கு சென்று, பொறுப்பை ஏற்று, துறை ரீதியான பணிகளை மேற்கொண்டனர்.

No comments: