Monday, May 25, 2015

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை இன்று நடத்த இயக்குநர் உத்தரவு



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை(மே 25), அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.


இது குறித்து அவர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 20-ஆம் தேதி அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
மே 25-ஆம் தேதி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி கீழ்கண்ட அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அவை உறுதியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை அன்புடன் வரவேற்று, நல்லதொரு கற்றல் சூழல் உருவாக்கித் தருவதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு அளித்துள்ள விலையில்லா பாடப்புத்தகம், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட வேண்டும்.
விலையில்லா பேருந்து பயண அட்டைகள் தேவைப்படும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் காலதாமதமின்றி, பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும் முன்தினமே உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல் புதர் போன்றவை இல்லாமல் இருப்பதையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி திறப்பதற்கு முன்தினம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்புறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆங்கிலப் பிரிவு தொடங்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் காலதாமதமின்றி குறித்த நேரத்தில் வருகை புரிதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி வயதுக் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் அட்டைகள், கணித உபகரணப் பெட்டி, கணினி, பல்நோக்கு கருவி, தொலைக்காட்சிப் பெட்டி, டிவிடி, புத்தகப் பூங்கொத்து, 75-க்கும் மேற்பட்ட பாடவாரியான குறுந்தகடுகள், அறிவியல் உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: