Friday, July 4, 2014

கலையரங்கத்தில் இயங்கும் அரசுப்பள்ளி

கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி அருகே மணப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி போதிய வகுப்பறைகளின்றி கலையரங்கம் மற்றும் சுயஉதவி குழுக்கட்டடங்களில் இயங்குவதால், மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
இப்பள்ளி 2011ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கச்சிராயன்பட்டி, பட்டூர், மாங்குளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். 9 மற்றும் 10ம் வகுப்புகள் நடத்த வகுப்பறைகள் இல்லாததால், 3 ஆண்டுகளாக, அருகிலுள்ள கலையரங்கம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக் கட்டடங்களில் நடத்தப்படுகின்றன.
பள்ளிக்கென விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், சிரமங்களுக்கிடையில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை உள்ளது. புதிய பள்ளிக் கட்டடத்திற்கென்று ஊராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கிக் கொடுத்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அதற்கான பணி துவங்கவில்லை.
ஊராட்சி தலைவர் மாணிக்கம் கூறுகையில், '' பஸ் ஸ்டாப் அருகே பள்ளிக்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி கொடுக்கப்பட்டன. ஒன்றரை ஆண்டுக்கு முன் அங்கு கட்டடம் கட்ட கல்வித்துறை சார்பில் ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. வி.ஏ.ஓ., நிலத்தை ஆய்வு செய்து சான்றளித்துள்ள நிலையில், வருவாய்த்துறை உயரதிகாரிகள் ஏனோ சான்றளிக்க மறுக்கின்றனர். இதனால் புதிய பள்ளிக் கட்டடம் கட்டும்பணி தாமதமாகிறது. விரைவில், கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

No comments: